Saturday, October 8, 2011

கொலு!சென்னையில் கடந்தமுறை சர்க்கஸ்-ஐ மூர் மார்க்கெட் அருகே அமைத்திருந்த பொழுது, அண்ணன் பையனை அழைத்துப்போவதாக வாக்குறுதி தந்தேன். வேலை நெருக்கடியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றமுடியவில்லை. பல நாள்கள் முறைத்துக்கொண்டே திரிந்தான்.

பிராயசித்தமாக நவராத்திரி கொலு ஒன்றிக்கு அழைத்துப் போகலாம் என யோசித்தேன். சமயோசிதமாய், இந்தமுறை அவனிடம் எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லை. சென்னையில் எங்கு நிறைய்ய... பொம்மைகள் கொண்டு கொலு அமைப்பார்கள் என தேடியபொழுது, சென்னை தீவுத்திடலில் கொலு வைத்திருப்பதாக செய்தி பார்த்தேன்.

கடந்த ஞாயிறு பையனுடன் போயிருந்தேன். பொருட்காட்சிக்கு இருக்கும் நுழைவாயிலை போய்ப்பார்த்தால், கேட் மூடியிருந்தது. பகீரென்று இருந்தது. பிறகு, ஆற அமர விசாரித்தால், கொஞ்சம் தள்ளி வேறு ஒரு நுழைவாயில் இருப்பதாக வயிற்றில் பாலை வார்த்தார்கள்.

உள்ளே நுழையும் பொழுது, இரண்டு கரகாட்ட பெண்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நீள டெண்ட் அடித்து, ஆயிரக்கணக்கான பொம்மைகளை சீராக அடுக்கி வைத்திருந்தார்கள். எங்களைப் போல பலரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் நிறைய இல்லை.

கொலு வட இந்தியாவில் கிடையாதாம்! தென்னிந்தியாவில் தான் பிரபலமாம்! கின்னஸ் சாதனை முயற்சிக்காக இந்த விழாவை நிகழ்த்துவதாக விழாக் குழுவினர் அறிவித்தார்கள்.

பொம்மைகளில் 75% கடவுளர்களின் பொம்மைகள் தான். மற்றவை கிரிக்கெட், விலங்குகள், பறவைகள், பூங்காக்கள்! கமல் ஏன் தசாவாதாரத்திற்கு ஆசைப்பட்டார் என அறிய முடிந்தது! பிள்ளையார் துவங்கி பல கடவுளர்களும் தசாவாதாரம் எடுத்திருந்தார்கள். பொம்மைகள் பார்க்கும் ஆர்வத்தை விட, ஐஸ்கிரீம், பாப்கார்ன், பெரிய அப்பளம் விற்கும் இடத்திலேயே கவனமாக இருந்தான் பையன்.

கொலு அரங்கு அருகிலேயே கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு அரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். இராமன் கதையை பள்ளி மாணவிகள் நாட்டிய நடனமாக 12 நிமிடங்களில் நிகழ்த்தி காட்டினார்கள். 'ஜகன் புகழும் புண்ணிய கதை, இராமனின் கதையே' என்ற மிக பழைய பாடலை இதற்காக பயன்படுத்தியிருந்தார்கள். எல்லோரும் சிறப்பாகவே செய்தார்கள்.

குறிப்பாக இராமன் பாத்திரம் எவ்வளவு சித்திரவதை செய்தாலும், சிரிப்பை அவர் உதடுகளிலிருந்து பிரிக்கமுடியாதவராக இருந்தார். அனுமராக நடித்தவர் மிக பலகீனமாக இருந்தார். குரங்கு முகம் என்பதால், யாரும் நடிக்க முன்வரவில்லை போல! கதைப்படி, அனுமன் மிக பலசாலி! அனுமன் தன் அம்மாவிடம் "நானே போய் சீதையை அயோத்தியில் தூக்கி வந்துவிடுகிறேன்!' என சொல்ல, அதற்கு அனுமனின் அம்மா 'நீ வாயு புத்திரன். உன்னால் எளிதாய் செய்யமுடியும்! யாரையும் வீழ்த்திவிட முடியும்! ஆனால், இராமன் தான் விதிப்படி, சிரமப்பட்டு சீதையை மீட்டுவர வேண்டும். ஆகையால், பொறுமையாக இராமனுக்கு உதவு!' என சொல்லி அனுப்புவார். வேறு சில கிளைக்கதைகளிலும், அனுமன் மிக பலசாலி என விளக்கியிருப்பார்கள். அனுமனாய் நடித்தவருக்கு வால் நல்ல தடிமன்! ஆள் வீக்! காமெடியாக இருந்தது!

இராமாயணம் - ஆரியர்கள், அசுரர்கள் இடையே நடந்த போர். அது, இந்த நாடகத்திலேயே கூட வெளிப்பட்டது. இராமனின் ரத்த சொந்தங்கள், உறவுகள் எல்லோரும் சிவப்பாக, கொஞ்சம் வெள்ளையாக இருந்தார்கள். சூர்ப்பனகையும், இலங்கேஸ்வரனும் இருவரும் கருப்பாக இருந்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு பறையாட்டம் (தப்பாட்டம்) நிகழ்வு ஒன்றை 4 பெண்கள்; 4 ஆண்கள் என ஒரு குழு நடத்தியது. 15 நிமிடம். ஒரு அருமையான ஆட்டத்துடன், பறையடித்து பட்டைய கிளப்பினார்கள். பார்வையாளர்கள் மத்தியில் நல்ல உற்சாகம். வாண்டுகள் சிலர் ஆட்டம் போட்டனர். ஆடி முடித்தபின் வியர்வையில் குளித்துவிட்டார்கள் அசுர குலத்தைச் சேர்ந்தவர்கள்.

அடுத்து, கர்னாடக சங்கீதம் பாட ஒரு குழு தயாரானார்கள். பொறுமையாய் அமர்ந்து, கேட்டு, பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டி விரும்பி மைக்கில் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மதிக்கவில்லையே! பாதி பேர் கிளம்பிவிட்டார்கள். 'வா! கணபதியே!' என ஆலாபனையை ஆரம்பித்தார்கள். அதுவரை அமைதியாக பார்த்து கொண்டிருந்தவன் "போலாமா!' என்றான் பையன். கிளம்பிவிட்டோம்.

No comments: