Friday, September 21, 2012

குற்றாலம்! அருவியின் நடனம்!

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.  ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம். மதுரையை சுற்றிக்கொண்டிருந்த காலம் வரைக்கும் எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!

குற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் மிதக்கும்.  இதமான காற்று உடலை வருடும்.

குற்றாலத்தை நெருங்க நெருங்க உள்ளுக்குள் மனம் பாட ஆரம்பித்துவிடும். மேக கூட்டம் அலைந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கருமேகமாய் அடத்தியாய் வருகிறதோ,  அப்பொழுது விழும் சாரல். லேசாக அடிக்கும் வெயில். சாரல், இதமான வெயில் என மாறி மாறி செல்லும். இந்த விசேஷ குற்றாலத்திற்கென்றே சிறப்பான துண்டுகள் விற்கப்படுகின்றன.

எங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று குளிக்க போய்கொண்டு இருப்பார்கள்.  அல்லது குளித்துவிட்டு வந்துகொண்டிருப்பார்கள்.  மக்களின் சந்தடி எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், அருவியின் சத்தம் மெல்ல கேட்கும்.  நம்மை செல்லமாய் அழைக்கும்.

போய் சேர்ந்ததும் ஒரு விடுதியில் அறையை பிடித்து, சுமைகளை போட்டுவிட்டு, உடனே குளிக்க கிளம்பிவிடுவோம். அருகில் இருப்பது மெயின் அருவி. குளிப்பது சுகம். அருவியில் குளிப்பது சுகமோ சுகம். குளிப்பது என்பது சாதாரண வார்த்தை.  குதூகலிப்பது. விளையாடுவது தான் சரி.

எவ்வளவு நேரம் குளித்தாலும், எத்தனைமுறை குளித்தாலும் அருவியின் குளியல் அலுக்காது. காடுகளின் வழியே, பல மூலிகைகளின் வழியே பயணப்படுவதால், குற்றால அருவியின் நீர் உடலை தொந்தரவு செய்வதில்லை.

பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை. மக்கள் அடுத்தடுத்த அருவிகளில் குளிக்க பயணப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அருவியைப் பற்றி ஒரு பதிவு எழுதினால், மனசு ஆறாது.  இன்னும் நிறைய எழுதுவேன்..

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருடத்திற்கு இரண்டு முறை செல்வதுண்டு...

செண்பகாதேவி அருவி... தேனருவி போனீர்களா...?

ஆர்வா said...

குற்றாலம் ஒரு மறக்க முடியாத அனுபவம்.. செண்பகாதேவி அருமைக்கு போவது செம அனுபவம் அதைவிட தேனருவி போவது செம செம செம த்ரில் அனுபவம்... நீங்க தேனருவி போய் இருக்கீங்களா?

CS. Mohan Kumar said...

100 க்கு வாழ்த்துகள் நான் 100 !

குமரன் said...

தனபாலன், மணிகண்ட வேல்,

செண்பகாதேவிக்கு பலமுறையும், தேனருவிக்கு இரண்டு முறையும் போயிருக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக சிற்றருவியோடு தடுத்துவிடுகிறார்கள். பொதுமக்களை செல்ல அனுமதிப்பதில்லை. அதனால், மற்ற அருவிகளை குறிப்பிடுவதொடு நிறுத்திக்கொண்டேன்.

ஆனால், அந்த அருவிகளைப் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் எழுதலாம் என நினைத்துள்ளேன்.

தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

குமரன் said...

மோகன்குமார்,

வாழ்த்துக்களுக்கு நன்றி. இதுகுறித்து ஒரு குட்டி பதிவு எழுதுவேன். உங்களுக்கு சிறப்பாக வாழ்த்துக்களையும் அதில் தெரிவிப்பேன். நன்றி